நம் குறையறிய ....
நம் குறையறிய ....
காட்டில் முனிவர் ஒருவர் தன் சீடர்களோடு வாழ்ந்து வந்தார், அவரிடம் புதிதாய் ஒரு சீடன் வந்து சேர்ந்தான், வந்த நாள் முதலே முனிவர் புரிந்து கொண்டார், இவன் பெருமைமிக்கவன், தலைக்கனம் பிடித்தவன் என்பதை
அவனும் அதை பலமுறை தன்னுடைய அனுதின வாழ்க்கையில் நிரூபித்துக்கொண்டிருந்தான், தன்னைப்போல் நீதிமான் யாருமில்லை, தன்னைப்போல் பக்தியுள்ளவன் யாருமில்லை என்பதே அவன் எண்ணம். இவனுக்கு பாடம் புகட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார் முனிவர்.
குறிப்பிட்ட நாளும் வந்தது, பக்கத்து நாட்டு மன்னன், முனிவரையும் சீடர்களையும் விருந்துக்கு அழைத்திருந்தான், முனிவரும் சீடர்களும் ஆயத்தமாகினர். முனிவர் தன் சீடர்களுக்கு கறுப்பு வண்ண ஆடையை அணிய கொடுத்தார், புதிய சீடனுக்கோ வெள்ளை நிற ஆடையை அணிய கொடுத்தார். கொடுத்து விட்டு சொன்னார், நம் கூட்டத்தில் இவரைப்போல் பக்தியுள்ளவனும், நீதியுள்ளவனும் எவருமில்லை , எனவேதான் நான் வெள்ளை சட்டை கொடுத்தேன் என எல்லாருக்கும் விளக்கமும் கொடுத்தார்.
அப்புதிய சீடனுக்கோ, பெருமை உச்சம் தொட்டது, மற்ற சீடர்களை அவன் இன்னும் இளக்காரமாய் பார்த்தான். மற்ற சீடர்களுக்கோ வருத்தம் ஏற்பட்டது, முனிவர் இப்படி எங்களை அவமானப்படுத்திவிட்டாரே என்று. ஆயினும் மன்னரை பார்க்கப்போகும் குஷியில் எல்லாவற்றையும் மறந்து பயணம் செய்ய தொடங்கினர்
நாட்டின் எல்லையை அடைந்ததும், ஏகப்பட்ட மக்கள் கூட்டம். முனிவரை பார்க்க மற்றும் ஆசீர்வாதம் வாங்க அநேகர் வந்திருந்தனர்.
மக்கள் முனிவரிடமும் மற்றும் சீடர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கினார்கள், ஆனால் அப்புதிய சீடனையோ மக்கள் ஒரு பொருட்டாகவோ நினைக்கவில்லை. அவன் அருகில் கூட மக்கள் செல்லவில்லை
போகும் வழியில் ஒரு பிரபு, நிறைய பரிசுகளை முனிவருக்கும் சீஷர்களுக்கும் வழங்கினான், புதிய சீடனையோ பொருட்படுத்தவேயில்லை. முனிவரும் இவரும் சீடன் தான் என அறிமுகப்படுத்தவுமில்லை
இறுதியாக அரசனைப் பார்க்க போனார்கள், புதிய சீடன் அரண்மனை வாசலிலே வாயிற்காவலனால் தடுத்து நிறுத்தப்பட்டான்.
மற்றவர்கள் உள்ளே சென்று மன்னரோடு விருந்துண்டு மகிழ்ந்தார்கள்.
புதிய சீடன் வாயிலில் கோபத்தோடு அமர்ந்திருந்தான்.முனிவர் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்னும் கோபம் அவனுக்கு, வரட்டும் முனிவரிடம் நாக்கு புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும் என்னும் வெறியில் நின்றான்
முனிவர் வந்தார். இவன் தன்னுடைய கோபத்தை தீர்த்துக்கொண்டிருந்தான். அமைதியாயிருந்த முனிவர் இடைமறித்து சொன்னார். உன்னை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என்று வாயிற்காவலனிடம் கேள் என்றார்
இவன் கேள்விக்கு, வாயிற்காவலன் பதில் சொன்னான், இவ்வளவு அழுக்காக யாராவது அரசனைப் பார்க்க வருவார்களா? மற்ற எல்லாரையும் விட உம் ஆடை கறை படிந்தல்லவா இருக்கிறது. மற்றவர்களின் ஆடைகளைப் பார்க்கும் போது கூட உமக்கு வித்தியாசம் தெரியவில்லையா? என்றான்.
நான் மட்டும்தான் அழுக்காக இருக்கிறேனா. உம் பார்வைக்கு அது புரியவில்லை, நான் வெள்ளை ஆடை போட்டிருப்பதால் உமக்கு தெரிகிறது. உற்றுப் பாரும் அவர்களிடமும் அழுக்கு இருக்கிறது. ஆடை கறுப்பாக இருப்பதால் உமக்கு தெரியவில்லை என வாதாடினான்
இப்போது முனிவர் மெதுவாக கேட்டார். எங்களிடம் அழுக்கு இருக்கு என்பதை நீ பார்த்தாயா? என்று.
ஏன்? இல்லை , இன்று நாம் வந்த பாதையில் வெள்ளை சட்டை போட்டு நீங்களும் ஒரு முறை வந்து பாருங்கள், அப்போது உண்மை புரியும் என்றான். கறுப்பு உடையில் அழுக்கு எப்படி எளிதில் தெரியும்? என்றான் அப்புதியவன்
முனிவர் மெதுவாக சொன்னார். நீயும் இவ்வுலகப்பயணத்தில் ஒருமுறை வெள்ளை மனத்தோடு பயணம் செய்து பார் , உன்னிடத்தில் எவ்வளவு பாவம் ஒட்டியிருக்கிறது என்னும் உண்மையும் உனக்கு புரியும் என்றார். உன் மனம் இருளாயிருந்தால் ( கருப்பாயிருந்தால் ) உன் குறை உனக்கு தெரிவதில்லை என்று நறுக்கென்று சொன்னார்.
அவன் பெருமை அன்று சுக்குநூறாய் உடைந்தது
*முனிவருக்கு தெரிந்திருந்தது . நாம் மன்னரை பார்க்க செல்லும் பாதை, மேடு, பள்ளம், குகை, தண்ணீர், சதுப்புநிலம், போன்ற பல இடங்களை தாண்டி செல்ல வேண்டும்' எனவே அதிகமான அழுக்கு ஆடையில் பட வாய்ப்புண்டு. எனவேதான் சாமர்த்தியமாக தாங்கள் கறுப்பு நிற ஆடையையும், அவனுக்கு வெள்ளை நிற ஆடையை கொடுத்தார்
### நம் குறைகளை நாம் அறியாதவரை தாழ்மை நமக்கு வருவதில்லை####
Bro. மெர்லின்
நல்ல நிலமாகு நண்பா
.jpg)
.png)

Comments
Post a Comment